×

டெல்டாவில் 4.55 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்: முன்கூட்டியே தண்ணீர் திறப்பால் கூடுதலாக 1.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி

திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டாவில் இந்தாண்டு 4.55 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதால், விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், முன்கூட்டியே தண்ணீரை திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று கடந்த மே 24ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் கல்லணையில் இருந்து, 27ம் தேதி திறந்து விடப்பட்டது.

இதனிடையே டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடியில் நடந்து வந்த தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, விரைந்து முடிக்கப்பட்டது. இதன்காரணமாக ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் விரைந்து சென்று கடைமடையை எட்டியது. திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, நாகை மாவட்டத்தில் செருதூர் கடுவையாறு, மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் மேலையூர் ஆகியவை கடைமடை பகுதிகளாகும். இங்கு காவிரி நீர் வந்து சேர்ந்து விட்டது. பாலப்பணி, தடுப்பணை பணிகள் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், புதுக்கோட்டையில் அறந்தாங்கி பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை.

டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டு 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், 4.55 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முழுவீச்சில் ஏற்பாடு நடந்து வருகிறது. டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் நிலங்களை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் வீடுகளில் சேரும் சாண குப்பைகளை கொண்டு வந்து, உரத்துக்காக வயல்களில் கொட்டி வருகின்றனர். போர்வெல் வசதி உள்ள விவசாயிகள் அதிகளவில் நாற்றுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். டெல்டாவில் மொத்தம் சுமார் 1 லட்சம் ஏக்கரில், இவ்வாறு விதை நாற்றுகளை விட்டுள்ளனர். பல இடங்களில் நேரடி நெல் விதைப்பு துவங்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.65 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 92,000 ஏக்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 75,000 ஏக்கர், திருச்சி மாவட்டத்தில் 15,000 ஏக்கரில் நடப்பாண்டு குறுவை சாகுபடி நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டு 66,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது. இந்தாண்டு அதை விட கூடுதலாக சாகுபடி நடைபெற உள்ளது.

டெல்டாவில் மொத்தமாக 4.55 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. டெல்டா மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டத்தில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், எதிர்வரும் காலங்களில் பருவமழையில் இருந்து தப்பிக்க முடியும். அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் செய்யும்போது ஈரப்பதம் அதிகம் இல்லாமல் எளிதாக நெல் கொள்முதல் செய்ய முடியும். இதனால் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளோம் என்றனர்.

Tags : Kuru ,Delta , Intensity of cultivation in 4.55 lakh acres in delta
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!