×

மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிப்பு ராஜஸ்தானில் காங். வெற்றி: மகாராஷ்டிரா, அரியானாவில் தாமதம்

புதுடெல்லி: ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உச்சகட்ட போட்டி நிலவிய ராஜஸ்தானில் 3 இடங்களை காங்கிரசும், ஒரு இடத்தை பாஜவும் கைப்பற்றியது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள கர்நாடகா (4), அரியானா (2), ராஜஸ்தான் (4) மற்றும் மகாராஷ்டிரா (6) ஆகிய 4 மாநிலங்களில் மொத்தமுள்ள 16 இடங்களுக்கு கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், 4 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற, வேட்பாளர் குறைந்தபட்சம் 41 ஓட்டுக்களை பெற வேண்டும்.

ராஜஸ்தானில் 4வது இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதால் காங்கிரஸ், பாஜ இரு கட்சிகளும் தங்களின் எம்எல்ஏக்களை கடந்த சில நாட்களாக சொகுசு ஓட்டலில் தங்க வைத்திருந்தனர். நேற்று வாக்குப்பதிவுக்காக அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். இதே போல, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏக்களும் சொகுசு ஓட்டலில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

தேர்தல் முறையாக நடப்பதை உறுதி செய்ய, 4 மாநிலத்திற்கும் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு முன்பாகவே 4 மாநிலத்திலும் அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்து முடித்தனர். அதைத் தொடர்ந்து, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 7 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரும், அரியானாவில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களின் வாக்குச்சீட்டை காட்டி ஓட்டு போட்டதாக பாஜ குற்றம் சாட்டியது. இவர்கள் தங்கள் வாக்கின் ரகசியம் காப்பதை மீறியதால், 5 பேரின் வாக்குகளை செல்லாததாக அறிவிக்கக் கோரி, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதனால் இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில், இரவு 8 மணிக்குப் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. முதலில், உச்சகட்ட போட்டி நிலவிய ராஜஸ்தானின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 108 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட பிரமோத் திவாரி (41 வாக்கு), முகுல் வாஸ்னிக் (42), ரன்தீப் சுர்ஜிவாலா (43) ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். பாஜ தரப்பில் ஞானஷியாம் திவாரி (43) வெற்றி பெற்றார். 4வது வேட்பாளராக பாஜ ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திரா தோல்வி அடைந்தார். கடந்த 2016ம் ஆண்டு இதே போன்ற சூழலில் சுபாஷ் சந்திரா வெற்றி பெற்று எம்பி ஆன அதிர்ஷ்டம் இம்முறை நடக்கவில்லை.

கர்நாடகாவில் பாஜ 3 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் (46 வாக்கு), ஜக்கேஷ் (44), லெஹர் சிங் சிரோயா (41) ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் (46) வெற்றி பெற்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் நிறுத்தப்பட்ட குபேந்திர ரெட்டி தோல்வியை சந்தித்தார். பாஜ, காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் மாறி மாறி புகார்கள் தந்ததால், மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.



Tags : Assembly ,Rajasthan Cong ,Maharashtra, Haryana , State Assembly Election Announcement Announcement Rajasthan Cong. Success: Delay in Maharashtra, Haryana
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு