×

சென்னை தலைமை செயலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்ற உறுதிமொழி ஏற்பு

சென்னை: உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்றனர். அதேபோன்று, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் தலைமையிலும் துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது, “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்று கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகர் கோபுர பூங்காவில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் கிர்லோஷ் குமார், திரைப்பட நடிகர்கள் இளவரசு, போஸ் வெங்கட், பிளாக் பாண்டி மற்றும் நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai General ,Secretariat , Pledge to eliminate child labor at Chennai General Secretariat
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...