×

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைப்பு; ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க அவசர சட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், காவல் துறையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டவர்களும் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இணையதள சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இந்த சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்க தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று (9ம் தேதி) நடந்தது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இந்த விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்த சமூக பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன்மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரி சட்டமாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Judge ,Chandru ,Chief Minister ,MK Stalin , Committee structure headed by retired Judge Chandru; Emergency law to ban online rummy: Decision at a meeting chaired by Chief Minister MK Stalin
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...