×

ஜூலை 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் பொது வேட்பாளரை தேர்வு செய்ய சோனியா காந்தி சம்மதம்: ஆளும் பாஜக தரப்பில் 3 பேரின் பெயர்கள் அடிபடுவதால் பரபரப்பு

புதுடெல்லி: வரும் ஜூலை 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது வேட்பாளரை தேர்வு செய்ய சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஆளும் பாஜக தரப்பில் தற்போதைக்கு மூன்று பேரின் பெயர்கள் அடிபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதியும் நடைபெறவுள்ளது. அதனால் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்தப் பட்டியலில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் பெயர் நேற்று டுவிட்டரில் டிரண்டிங் ஆனது. இவர், முஸ்லீம்கள் தொடர்பான பிரச்னைகளில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துகளை கூறுகிறார். சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையில், கத்தார் நாடு இந்தியாவை பகிரங்க மன்னிப்பு கோரவில்லை என்று கூறினார். நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட இவர், கடந்த 1986ல் ஷாபானு வழக்கில், அப்போதைய ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உடன்படாமல், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முத்தலாக் நடைமுறை நீக்க குரல் கொடுத்தார்.

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளை பல இடங்களில் பாராட்டியுள்ளார். அதனால், ஆரிப் முகமது கானின் பெயர் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணம் முன்னாள் முதல்வர் மாயாவதி, தேர்தல் களத்தில் பாஜகவுக்கு எதிராக செயல்படவில்லை என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார். அதனால், மாயாவதிக்கு குடியரசு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும் சமீபத்தில் தேசிய ஊடகங்களில் பேசப்பட்டது. மேலும், ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயரும் குடியரசு தலைவர் வேட்பாளர் பெயரில் அடிபடுகிறது.

இதற்கு காரணம், முக்தார் அப்பாஸ் நக்வியின் எம்பி பதவிகாலம் முடியும் நிலையில், அவருக்கு மீண்டும் எம்பி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதனால், அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒன்றிய அமைச்சராக இருந்தும், ராஜ்யசபா தேர்தலில் அவரை களமிறக்காததற்கு இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆளும் பாஜக தரப்பில் இவ்வாறு செய்திகள் வரும் நிலையில், எதிர்கட்சிகள் தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

அதன்படி ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். இந்த யோசனைக்கு சரத் பவார் ஆதரவு தெரிவித்தார். சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவையும் சந்தித்துப் பேச உள்ளேன். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளேன். அதன்பின், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தவுள்ளோம். அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்றார்.

எப்படியாகிலும் மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப் சபைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பாஜகவின் பலம் அதிகமாக உள்ளது. அதனால், பாஜக முன்னிருத்தும் குடியரசு தலைவர் வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

களத்தை மாற்றும் 3 கட்சிகள்
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில், அதற்கு ஆளும் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு தேவை. அந்த பட்டியலில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்த கட்சிகள் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், குடியரசு தலைவர் தேர்தல் என்பது கடுமையான போட்டிக்கு வாய்ப்பளிக்கும். அதனால் பாஜகவுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட மூன்று கட்சிகளும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றால், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் வியூகம் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அதற்கு குடியரசு தலைவர் தேர்தல் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.

Tags : Sonia Gandhi ,President of the Republic ,bajka party , Presidential election, Sonia Gandhi consents,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!