×

மயிலாடுதுறை, காரைக்காலில் என்ஐஏ சோதனை: செல்போன், சிம்கார்டு, வங்கி புத்தகங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நீடூரை சேர்ந்தவர் அக்கம்மா (எ) சாதிக்பாஷா(38). இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 21ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே சாதிக்பாஷா, அவரது கூட்டாளிகளான இலந்தன்குடியை சேர்ந்த ஜஹபர் அலி(58), கோவையை சேர்ந்த முகமது ஆஷிக்(29), திருச்சியை சேர்ந்த முகமது இர்பான்(22), சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரஹ்மத்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், 5 பேரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி ெதாடர்பில் இருந்ததும், பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து சாதிக்பாஷா உள்பட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சமீபத்தில் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து சென்னையில் இருந்து என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித் தலைமையில் 14 பேர் நேற்று காலை மயிலாடுதுறை வந்து தலா 3 பேராக பிரிந்து மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர், எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

 நீடூரில் சாதிக் பாட்ஷாவுக்கு தொடர்புடைய ஒரு வீடு, குத்தாலம் அருகே அரிவேளூரில் ஜெகபர் அலி வீடு, கிளியனூரில் உள்ள சாதிக் பாஷா தொடர்புடைய அப்துல் வாஹிது வீடு மற்றும் உத்திரங்குடி, எலந்தலூர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தினர். அதேபோல் காரைக்கால் சுண்ணாம்பு காரத்தெருவில் உள்ள திருச்சி முகமது இர்பானின் மாமனார் முகமது யாஹிப் வீட்டில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நேற்று பகல் 2.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது. இதில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்னைக்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். அதேபோல், காரைக்காலில் உள்ள முகமது இர்பானின் மாமனார் முகமது யாஹிப் வீட்டில், செல்போன், சிம்கார்டு, ஆதார் கார்டு, வங்கி புத்தகங்கள் மற்றும் தடயங்களை  கைப்பற்றினர்.

Tags : NIA ,Mayeladuthur ,Karaikal , Mayiladuthurai, Karaikal, NIA check, cell phone, SIM card, bank books confiscated
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...