தஞ்சை, நாகை கோயில்களில் 3 சாமி சிலைகள் ஒப்படைப்பு: 45 ஆண்டுகளுக்கு பிறகு வந்ததால் பக்தர்கள் உற்சாகம்

தஞ்சை: தஞ்சை, நாகை, அரியலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பழமையான கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போனது. இதில் 10 சிலைகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த சிலைகள் முறைப்படி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த 1ம் தேதி புதுடெல்லியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு டிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில் ஐ.ஜி.தினகரன், எஸ்பி.ராஜாராமன், ஏடிஎஸ்பி மலைச்சாமி ஆகியோர் நடராஜர் சிலையை கொண்டு வந்தனர். தஞ்சை அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் கோயிலில்சிலையை ஒப்படைத்தனர்.

45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோயிலுக்கு வந்த நடராஜர் சிலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலைகள் அணிவித்து, கற்பூர ஆரத்தி காட்டி, மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் உற்சாகத்துடன், நடராஜன் சிலையை வணங்கினர். இதேபோல் அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயிலிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிவன்பார்வதி ஐம்பொன் சிலை, நாகப்பட்டினம் சாயவனேஸ்வரர் கோயிலிலிருந்து 1965ம் ஆண்டு மாயமான குழந்தை சம்பந்தர் ஐம்பொன் சிலையும் அந்தந்த கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: