சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்களைப் போன்று களத்திலிருந்தார்கள் என்றால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் வீடு கட்டும் பணி ஆணை மற்றும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான ஆணை ஆகியவற்றை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்திட்டத்திற்காக இன்று கோவை மாவட்டத்திற்கென முதலமைச்சர், 18 கோடியே 45 லட்சம் ஒதுக்கியுள்ளதாகவும், வரக்கூடிய காலத்தில் மீதமுள்ள பயனாளிகளுக்கும் உதவிடும் வகையில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வார் எனத் தெரிவித்த அவர், இந்த ஓராண்டுக் காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவை 24×7 சேவையில் 8,407 புகார்கள் பெறப்பட்ட நிலையில் 4,637 புகார்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், பாஜகவினர், அவர்களே திறந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்களைப் போன்று களத்திலிருந்தார்கள் என்றால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது எனக் காட்டமாகத் தெரிவித்தார். வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், சுற்றுலாத் துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Related Stories: