×

புளியந்தோப்பில் வீட்டையே மதுபான கூடமாக்கிய கும்பல்

பெரம்பூர்: வீட்டையே மதுமான கூடமாக மாற்றிய கும்பலால் இரவு நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சென்னையில் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடிய பின்பு, சில இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அவர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு சரகத்திற்குட்பட்ட புளியந்தோப்பு குருசாமி நகர் 6வது தெருவில் ஒரு வீட்டில் இரவு 10 மணி முதல் மது விற்பனை நடக்கிறது. மறுநாள் காலை மதுபான கடைகள் திறக்கும் வரை தொடர்ந்து விற்பனை நடந்து வருகிறது. அந்த வீட்டில் உள்ள 5 அறைகளில் தண்ணீர் டம்ளர், சைடிஷ் என அனைத்தும் கிடைக்கிறது. வீட்டிற்குள் வருபவர்கள் 10 நிமிடத்திற்குள் மதுவை வாங்கி குடித்து விட்டு தேவையான சைடிஷ்களை சாப்பிட்டு விட்டு வெளியே சென்று விட வேண்டும். எந்தவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபட கூடாது. குவாட்டருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக விலை விற்கப்படுகிறது.

இரவு நேரங்களில் இந்த இடத்திற்கு வரும் குடிமக்கள் குடித்து விட்டு வெளியே வந்து தகராறில் ஈடுபடுவதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக இந்த வீட்டில் செயல்படும் மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Puliyanthope , Puliyanthoppu, the gang that made the house a liquor store
× RELATED புளியந்தோப்பில் அதிகாலை பரபரப்பு...