×

பகுதி நேரம் வேலை வாங்கி தருவதாக சென்னை ஐஐடி மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை

சென்னை: பகுதி நேரம் வேலை வாங்கி தருவதாக சென்னை ஐஐடி மாணவி ஒருவரிடம் ரூ.1.46 லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சரிதா தல்லூறு(21). இவர் சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேர வேலை வேண்டி சமூக வலைத்தளங்களில் வேலை தேடி வந்தார். அப்போது ஆன்லைன் மூலம் தாவு நிதிஷ் ரெட்டி என்பவர் அறிமுகமானார். அவர் சரிதா தல்லூறுக்கு பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக முன்பணமாக ரூ.1.50 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று சரிதாவிடம் தாவு நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும், சரிதாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு இருமடங்கு வட்டியும் மற்றும் வேலையும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய சரிதா, தான் செலவுக்கு வைத்திருந்த ரூ.96 ஆயிரம் பணத்தை போன் பே மூலம் தாவு நிதிஷ் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதோடு இல்லாமல் தன்னுடன் படிக்கும் நண்பர்களிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை கடன் வாங்கி செலுத்தியுள்ளார்.

ஆனால் ரூ.1.46 லட்சம் பணம் செலுத்தியும் சரிதாவுக்கு வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து தாவு நிதிஷ் ரெட்டியிடம் போன் செய்து கேட்ட போது சரியான பதில் இல்லை. மேலும், அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரிதா கடும் மன வேதனையில் இருந்தார். இதற்கிடையே கொடுத்த கடனை நண்பர்கள் சரிதாவிடம் கேட்டு வந்தனர்.

பின்னர் வேறு வழியின்றி சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளை வைத்து மோசடி நபரை தேடி வருகின்றனர். ஐஐடி மாணவி ஒருவர் பகுதி நேர வேலைக்காக ரூ.1.46 லட்சம் இழந்த சம்பவம் ஐஐடி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : IIT ,Chennai , Part time job, Chennai IIT student, fraud, cyber crime police investigation
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...