×

திருவொற்றியூரில் கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடிக்கவேண்டும்: நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடிக்கவேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு  அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்ஜிஆர் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் கட்டுமான பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.52 கோடி செலவில் துவக்கப்பட்டது. 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் பணி 2018 டிசம்பர் மாதம் 31ம்தேதிக்குள் முடித்திருக்கவேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணி முடிவடையாமல் உள்ளது.

இதனால் திருவொற்றியூரில் இருந்து மணலி, மாதவரம் பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்து, கார் பைக்குகள் பக்கிங்காம் கால்வாய் ஓரம் அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக 8 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, குடிநீர் லாரிகள்கூட சுற்றி வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. பக்கிங்காம் கால்வாய் ஓரம் ஆபத்தான சாலையில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து, திருவொற்றியூர் கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பல மாதங்களாக கிடப்பில் இருந்த பணி மீண்டும் துவக்கப்பட்டு பாலத்தின் மேல் தளங்கள் முற்றிலுமாக முடிக்கப்பட்டன.

90 சதவீத பணி முடிந்துவிட்ட நிலையில், பாலத்தின் இருபுறமும் இறங்கு பாதைகள், சர்வீஸ் சாலைகள் மற்றும் மின் விளக்குகள் போன்ற பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tiruvottiyur , Tiruvottiyur, Canal Overpass Work, Highways Department, People's Demand
× RELATED சாலையோர கடையில் விற்கப்பட்ட...