பாகிஸ்தான் எம்பி மாரடைப்பால் மரணம்; விவாகரத்து கோரியுள்ள 3வது மனைவி அதிர்ச்சி

கராச்சி: பாகிஸ்தான் எம்பியான அமீர் லியாகத் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய அவரது மூன்றாவது மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான அமீர் லியாகத், கராச்சியில் உள்ள அவரது வீட்டில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதால், போலீசார் அமீர் லியாகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் அமீர் லியாகத், சையதா டானியா ஷா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். டானியா ஷா விட அமீர் லியாகத் 31 வயது மூத்தவர். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருமணமான நான்கு மாதங்களில் இருவரும் பிரிந்தனர். விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமீர் லியாகத் போதைப்பொருள் பயன்படுத்தியதால், அவரிடம் இருந்து விவாகரத்து கோரியதாக டானியா குற்றம்சாட்டினார். இந்த நிலையில், அமீர் லியாகத் இறந்ததால், தனது கணவரின் மரணம் தொடர்பாக இரங்கல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘இறைவன் அவரை மன்னிக்கட்டும்; ஆனால் அவரது மரணம் அதிர்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 1972ல் கராச்சியில் பிறந்த அமீர் லியாகத், 2002ல் அரசியலுக்கு வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் ஆட்சியில் அமைச்சரானார். பின்னர் முஷரப்பின் கட்சியில் இருந்து விலகினார். நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், கடந்த 2018ம் ஆண்டு இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு கராச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். சில ஆண்டுகளுக்கு பின்னர், இம்ரான் கானின் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: