நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் நேரடியாக கலக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு-மாநகராட்சி கவனிக்குமா?

நெல்லை : நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், இதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என எதிர்பார்க்கின்றனர்.  ஆண்டுமுழுவதும் வற்றாத ஜீவநதியாக ஓடும் தாமிரபரணி நதியானது மேற்குத் தொடர்ச்சி மலை பொதிகை மலையில் உற்பத்தியாகி, காரையாறு அணைக்கட்டில் துவங்கி தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை பாய்ந்து ஆத்தூர் முக்காணியை கடந்து கடலில் கலக்கிறது. இந்நதியின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் இந்நதியானது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்துவைக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

இதனால் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை மாசு படாமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம், உடையார்பட்டி, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், குருந்துடையார்புரம்,  உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை (கழிவுநீர்) நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அந்தவகையில்  நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையிலும் மாநகராட்சி சாண மயானக்கூடத்திற்கு எதிரேயுள்ள பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றுநீர் மாசடைவதோடு, அதை பயன்படுத்துவோருக்கு தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 எனவே, இவ்வாறு நெல்லை மாநகர பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும். குறிப்பாக நீண்ட காலமாக மந்தகதியில் நடந்துவரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு விரைந்துசெய்துமுடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அத்துடன் தாமிரபரணியை மாசடையாமல் பாதுகாத்து வருங்கால சந்ததியினரும் நல்ல முறையில் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: