×

திருமுருகன்பூண்டி அருகே ஸ்கூட்டர்-தண்ணீர் லாரி மோதி இளம்பெண் பலி-சடலத்தில் இருந்து 3.5 பவுன் நகை திருட்டு

திருப்பூர் : திருமுருகன்பூண்டி அருகே விபத்தில் பலியான பெண்ணிடம் 3.5 பவுன் நகை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் ஆத்துப்பாளையம் கே.சி.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். டயர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சண்முகபிரியா வீட்டிற்கு காய்கறிகள் வாங்குவதற்காக திருமுருகன்பூண்டிக்கு சென்றார். காய்கறிகள் வாங்கி விட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்துள்ளார். திருமுருகன் பூண்டி கோயிலுக்கு பின்புற பகுதியில் வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரியும், சண்முகபிரியா ஓட்டி வந்த ஸ்கூட்டரும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சண்முகபிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர்.

அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3.5 பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்ம நபர்கள் திருடினார்களா? அல்லது ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும்போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Thirumuruganpoondi , Tiruppur: Police are investigating a man who stole 3.5 pounds worth of jewelery from a woman who was killed in an accident near Thirumuruganpoondi.
× RELATED திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள்...