புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்-எடை போடாததால் பயிர் மூட்டை தேக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தை  தொடர்ந்தனர். இதனால் மார்க்கெட் கமிட்டிக்கு வந்துள்ள பயிர் மூட்டைகள் எடை  போடப்படாமல் தேங்கிக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி  விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் தட்டாஞ்சாவடி உள்பட 6 ஒழுங்குமுறை  விற்பனைக் கூடங்களும், லாஸ்பேட்டை மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியில் 2  உழவர்சந்தைகளும் இயங்குகின்றன. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சம்பளம்  வழங்கப்படவில்லை. இதையடுத்து நிலுவை சம்பளத்தை கேட்டு தொடர் வேலை  நிறுத்தத்தை விற்பனைக்குழு நலச்சங்க (ஏஐடியுசி) ஊழியர்கள் சங்கத்தினர்  நேற்று முன்தினம் தொடங்கினர்.

 முதல்நாளில் மேற்கண்ட இடங்களில் அவர்கள்  ஒட்டுமொத்தமாக பணிகளை புறக்கணித்தனர். இதனால் உழவர்சந்தைக்கு வந்த  விவசாயிகள், எடைபோட விளை பொருட்களை எடுத்துவந்த விவசாயிகள்  ஏமாற்றமடைந்தனர். இதனிடையே உழவர்சந்தையை மறித்து போராட்டம் நடத்திய  மார்க்கெட் கமிட்டி ஊழியர்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இது  புதுச்சேரி விற்பனைக்குழு நலச்சங்க ஏஐடியுசி ஊழியர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு  பதிலாக பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்ட துறை செயலரின் நடவடிக்கையை  கண்டித்து நேற்று தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி எடைபோடும் ஷெட்டில்  திரண்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு ேநற்று  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்துக்கு சங்க தலைவர்  பாஸ்கர பாண்டியன், செயலாளர் சண்முகம், பொருளாளர் பழனிராஜா ஆகியோர் தலைமை  தாங்கினர். செயல் தலைவர் செல்வநாதன், துணைத் தலைவர் பரந்தாமன் முன்னிலை  வகித்தார். இதில் ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ்  பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதில்  50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன  முழக்கமிட்டனர்.

புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்களின் 2வது நாள் தொடர்  போராட்டம் காரணமாக மார்க்கெட் கமிட்டிக்கு வந்திருந்த அரிசி, மணிலா  உள்ளிட்ட ஆயிரக்கணக்கிலான பயிர் வகை மூட்டைகள் எடை போடப்படாமல் அங்கேயே  தேங்கிக் கிடக்கின்றன. விவசாயிகளின் பயிர்களுக்கான பணம் கிடைக்கப் பெறாமல்  அவதிப்படும் நிலை உருவாகி உள்ளன. எனவே புதிதாக நேற்று அதிகளவில் மூட்டைகளை  தமிழக விவசாயிகள் எடுத்து வரவில்லை. அதேவேளையில் விவசாயிகளும் தாங்கள்  பயிரிட்ட காய்கறிகளை உழவர்சந்தைக்கு எடுத்து வராமல் புறக்கணித்தனர்.  இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென அரசை வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: