இனி பயம் இல்லை!: விலங்குகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது ஒன்றிய அரசு..!!

அரியானா: விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. ஹரியானாவில் முதல் முறையாக கேனைன் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுமார் 15 நாய்கள் உயிரிழந்தன. தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் வாந்தி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு பலவீனமாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வயிற்றுப்போக்கால் அவதிப்படும் நாய்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும், அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனோகோவாக்ஸ் என்ற அந்த தடுப்பூசியை ஹரியானாவில் உள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இதனை ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தோமர் காணொலி வாயிலாக அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கொரோனாவின் டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய இரு திரிபுகளையும் நடுநிலைப்படுத்தக்கூடிய வகையிலான நோய் எதிர்ப்புத்திறனை அனோகோவாக்ஸ் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாய்கள், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: