16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தொடங்கியது!: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, கர்நாடகாவில் பரபரப்பு..!!

உதய்பூர்: 16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. உத்திரப்பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 6 உறுப்பினர்கள் உள்ளிட்ட 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். கர்நாடகாவில் உள்ள 4 இடங்களுக்கு பாரதிய ஜனதா சார்பில் 3 பேர், காங்கிரஸ் சார்பில் 2, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஒருவர் என 6 வேட்பாளர்கள் கலத்தில் உள்ளனர்.

பாரதிய ஜனதாவுக்கு 2, காங்கிரசுக்கு 1 இடம் உறுதியாகிவிட்ட நிலையில் 4வது இடத்துக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. குதிரை பேரத்தை தடுக்க தனது கட்சி எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார் மத சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. ராஜஸ்தானில் 4 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரசுக்கு 3ம், பாரதிய ஜனதாவுக்கு ஒரு இடமும் உறுதியாகியுள்ளது. குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் கட்சி தமது எம்.எல்.ஏக்களை உதய்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது.

மராட்டியத்தில் உள்ள 6 இடங்களில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும், பாஜகவுக்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 6வது இடத்திற்கு ஆளும் சிவசேனா கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சிறையில் உள்ள அமைச்சர் நவாப் மாலிக், முன்னாள் அமைச்சர் அணில் தேஷ்முக் ஆகியோர் வாக்களிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டதால் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: