செங்கல்பட்டில் நரசிம்ம பெருமாள் கோயில் தேர்த்திருவிழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நரசிம்ம பெருமாள் கோயிலில் நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் மலையை குடைந்து ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரசித்திபெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மகா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு மகா உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கருடவாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், யாளி வாகனம் போன்ற வாகனங்களில் நரசிம்ம பெருமாள் எழுந்தருளி காலையிலும், மாலையிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7ம் நாளான நேற்று திருத்தேர் விழா நடந்தது. இதில், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், செங்கல்பட்டு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். இந்த கோயில் பலருக்கு குலதெய்வமாக விளங்குவதால், பலர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Related Stories: