×

தமிழக காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்ட திருத்தம் குறித்து தெரிவிக்க இறுதி அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு கருத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013ல் தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில், எஸ்பி, மற்றும் கூடுதல் எஸ்பிக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

 தமிழக அரசின் இந்த சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை? உள்துறை செயலாளர், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் கலெக்டர், எஸ்.பி. அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை. உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள்? புகார் ஆணையம் அமைத்த சட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அதை ரத்து உத்தரவிட நேரிடும். சட்டத்தில் திருத்த செய்வது தொடர்பாக அரசு தெரிவிப்பதற்கு இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamil Nadu Police Complaints Commission ,Chennai High Court , Last opportunity to inform about the legal amendment to be made by the Tamil Nadu Police Complaints Commission: Chennai High Court order
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...