×

ஆற்காடு குப்பம் கிராமத்துக்குள் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்க கோரி சாலை மறியல்

திருத்தணி: ஆற்காடு குப்பம் கிராமத்துக்குள் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் நடத்தினர். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் என்னும் கிராமம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்தின் வழியாகத்தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது கிராமத்திற்கு வெளியே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை ஏற்படுத்திய பின், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் எதுவும் கிராமத்து வழியாக செல்வதில்லை. புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்று வருகின்றன. இதனால், பொதுமக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணிகள் என பலரும் தேசிய நெடுஞ்சாலைக்கு நடந்து வர வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுமட்டுமின்றி, இலுப்பூர் ராமாபுரம் போன்ற கிராம மக்களும் தங்கள் கிராமத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, மீண்டும் கிராமத்து வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிகை வைத்தனர். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கனகம்மா சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பொதுமக்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Arcot Kuppam village , Road blockade demanding operation of government buses again inside Arcot Kuppam village
× RELATED யானை தாக்கி விவசாயி பலி