×

சமய ஆதீனங்கள் மற்றும் பெரியவர்கள் அறநிலையத்துறையை குறை கூறக்கூடாது: மயிலம் ஆதீனம் பேச்சு

பெரம்பூர்: சமய ஆதீனங்கள் மற்றும் பெரியவர்கள் யாரும் இந்து அறநிலைத்துறை குறை கூறக்கூடாது, என கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மயிலம் ஆதீனம் பேசினார். கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி தலைமையில், சமத்துவ அரங்கம் என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம், பெரம்பூர் கல்கி அரங்கநாதன் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நீதியரசர் அக்பர் அலி, மயிலம் ஆதீனம், கிருஷ்ணசந்த் சோர்டியா, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

கருத்தரங்கில் மயிலம் ஆதீனம் பேசுகையில், ‘‘சமயம் என்பதை மனித குலத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும். இந்தியா சகோதரத்துவம் கொண்ட நாடு. இங்கு அனைவரும் சமம். பகுத்தறிவு என்பது பெரியார் போட்ட விதையாக இருந்தாலும், அதனை வளர்த்தது அண்ணா, பாதுகாத்து மக்கள் மத்தியில் நடைமுறையில் கொண்டு வந்தவர் கலைஞர். ஜனநாயக நாட்டில் சட்டப்படிதான் அனைவரும் இருக்க வேண்டும். சமய பெரியவர்கள் மற்றும் ஆதீனங்கள் தங்களது கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்க வேண்டும். அதனை தவிர்த்து அறநிலைத்துறையை குறை கூறக்கூடாது,’’ என்றார்.

முன்னாள் நீதியரசர் அக்பரலி பேசுகையில், ‘‘பெண்களுக்கான சம உரிமை, சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி என அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி. சாதி, மதம், இனம், மொழி, அடையாளம் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இடம்தான் சமத்துவபுரம். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உருவாக்கியதால்தான் என்னால் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் முடிந்தது,’’ என்றார்.

பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘‘திராவிட மாடல் என்பது காந்தியம் அடிப்படையிலும், பொதுவுடைமை தத்துவத்தை ஏற்புடையதாகவும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சமத்துவ சிந்தனையாளர்களால் உருவானதுதான் திராவிட மாடல். முதலமைச்சரின் பெருமையை அழிப்பதற்காக பாஜ பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதனை திமுகவினர் கலைஞர் வழியில் எதிர்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Tags : Peacock Athena , Religious aristocrats and adults should not criticize the charity: Peacock Athena talk
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...