×

சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் ரேஷன் அட்டை குறைதீர் முகாம்: நாளை நடக்கும் என அரசு அறிவிப்பு

சென்னை: ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 11-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நாளை திறந்தவெளி கூட்டம்
சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை திறந்தவெளி குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது.  இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தபட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai , Ration card reduction camp at 19 zonal offices in Chennai: Government announcement to take place tomorrow
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...