×

கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 2 ரோபோக்கள் அறிமுகம்

பீளமேடு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கோவை  விமான நிலையத்தில் விமானம் வருகை, புறப்பாடு குறித்து பயணிகள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக செயற்கை  நுண்ணறிவில் செயல்படும் 2 ரோபோக்கள் நேற்று மாலை அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையாளர்  பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரோபோக்களின் செயல்பாடு குறித்து கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது: ஒரு ரோபோ புறப்பாடு பகுதியிலும், மற்றொன்று வருகை பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வரும்போதும்,  விமான நிலையத்துக்குள் நுழையும்போதும் அவர்களை வரவேற்கும். மேலும் அவை பயணிகளை அணுகி ஏதாவது தகவல் வேண்டுமா? என்று கேட்கும். கேன்டீன் எங்குள்ளது என்று கேட்டால் அந்த ரோபோவே பயணிகளை அந்த இடங்களுக்கு அழைத்து செல்லும். விமானம் எத்தனை மணிக்கு புறப்படும் என்று அந்த  ரோபோவிடம் கேட்டால் உடனே அவை விமான நிலைய மேலாளருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு  ஏற்படுத்தி கொடுக்கும். இதன் மூலம் பயணிகள் ரோபோவில் உள்ள திரையில் தோன்றும் முனைய அதிகாரியிடம் நேரிடையாக பேசி தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இதனால் பயணிகள் அங்கும் இங்கும் செல்ல  வேண்டியதில்லை. இந்த ரோபோக்கள் ஆங்கிலத்தில் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பயன்பாடு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு கூடுதலாக ரோபோக்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore Airport , Introducing 2 robots for the convenience of passengers at Coimbatore Airport
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...