×

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்க இருக்கின்றன. பட்டாம்பூச்சியாய் மாணவர்கள் பள்ளிக்கு பரவசமாய் பறந்து வரப்போகிறார்கள். ஒவ்வொரு பள்ளியும் அவர்களை வரவேற்க தூய்மை துலங்கும் இடமாக துளிக்க வேண்டும். ‘தூய்மை பள்ளிகள் இயக்கம்’ என்ற முயற்சியை மேற்கொண்டு நாம் நம் பள்ளியை அழகு மிகுந்த இடமாக மாற்ற வேண்டும். சர்க்கரை பொங்கலாக இருந்தாலும் பரிமாறுகிற வாழையிலை அழுக்காக இருந்தால் ஆசையாக உண்ண முடியுமா? தூய்மையான இடத்தில் பயிலும் ஆர்வமும் அதிகரிக்கும். கல்வி கற்றுக் கொடுக்கும் இடம் கண்களில் ஒற்றிக்கொள்ளுமளவு கவித்துவம் பெற்று விளங்க உழைப்போம். ஒரு வாரம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளியின் அனைத்து அறைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். அறையில் இருக்கும் ஒட்டடைகளை அகற்றி, கரும்பலகைகளை செப்பனிட்டு, அழுக்குகளை சீர்செய்து புதிய அறையைப்போல மெருகேற்ற வேண்டும். உடைந்த அறைகலன்களை சரிசெய்து நிமிர்த்தி வைக்க வேண்டும். முடிந்தால் வண்ணம் பூசி வாளிப்பாக மாற்ற வேண்டும். ஆர்வமும், துடிப்பும் இருக்கும் பல தலைமையாசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், சேவையமைப்புகளையும் பயன்படுத்தி பள்ளிகளை பாங்குடன் பராமரிப்பதை பார்த்திருக்கிறேன்பள்ளி வளாகத்தில் உதிர்ந்திருக்கும் இலைகளையும், முறிந்திருக்கும் கிளைகளையும் அப்புறப்படுத்தி மாணவர்கள் உள்ளே நுழையும்போது புதிய பள்ளிக்குள் நுழையும் அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும்.

எத்தனையோ நல்லிதயங்கள் பள்ளிகளுக்கு பணிவிடை செய்ய, பணவிடையை தர தயாராக இருக்கிறார்கள். பூக்களை இணைக்கும் நாராக நாம் செயல்படுவது அவசியம். வசதிகளை அவர்களே செய்ய நாம் உதவ வேண்டுமே தவிர, பணத்தை நாம் கையாண்டு புகார்களுக்கு புகலிடமாகி விடக்கூடாது. பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்களை அழைத்து அவர்கள் ஒத்துழைப்பை பெற்று பள்ளிகளில் இன்னும் சில அத்தியாவசிய பணிகளை ஏற்படுத்தும் முயற்சியில் முழுமூச்சாய் இயங்க வேண்டும், இறங்க வேண்டும்.

சத்துணவு சமைக்கும் கூடத்தை வெள்ளையடித்து, அடுப்புகளை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நான் குறிப்பிட்டவை வரைபடங்களே தவிர வழியல்ல. உங்கள் ஈடுபாட்டுக்கேற்ப உங்கள் மாவட்ட பள்ளிகள் புத்தம்புது பொலிவுடன் விளங்க வேண்டும். ‘எந்த நீண்ட பயணமும் சின்ன அடியில்தான் தொடங்குகிறது’ என்பதை நினைவில் வைத்து தூய்மை பள்ளிகள் இயக்கத்தை தொடங்குவோம். செய்பவற்றை ஆவணப்படுத்துவோம். மன நிறைவுகள் கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* தூய்மை பணிக்கு நிதி வசூலிக்க கூடாது
தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தன்னார்வலர்களையும் தூய்மை பணிக்கு சேர்த்துக் கொள்ளலாம். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது. பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள். இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Secretary ,District Education Officers , All schools must be cleaned as schools reopen after summer vacation: Chief Secretary's letter to district education officials
× RELATED கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்...