×

வைகாசி விசாக திருவிழாவையொட்டி வடபழனி முருகன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 12ம் தேதி திருக்கல்யாணம்

* ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
* அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது

சென்னை: சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதியுலா நடந்தது. கடந்த 3ம் தேதி மங்களகிரி விமானத்திலும், 4ம் தேதி சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 5ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 6ம் தேதி நாக வாகனத்திலும், 7ம் தேதி பஞ்ச மூர்த்தி புறப்பாடும், 8ம் தேதி யானை வாகனத்திலும் காலை 7 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

இந்த  விழாவில் முக்கிய நிகழ்வான 7வது நாள் தேர்திருவிழா நேற்று காலை 7.31 மணி  முதல் காலை 8.15 மணிக்குள் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணியளவில், வடபழனி முருகன் கோயிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில்  வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். தேரை பக்தர்களே வடம்  பிடித்து இழுத்தனர். அப்போது வீதிகளில் தேர் அசைந்தாடி வருவதை மனமுருக பார்த்த அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா’ என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். கோயில் மற்றும்  தெப்பக்குளத்தை சுற்றி தேர் பவனி வந்தது.

பின்னர் வடபழனி கோயில் அருகே உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேர் சென்ற வழியெல்லாம் பக்தர்களும் உடன் சென்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் உடன் சென்றனர். தேருக்கு முன்பாக வழிகாட்டும் நாயகனாக விநாயகர் சிலையும், தேருக்கு பின்னால் கோயில் பாதுகாவலரான சண்டிகேஸ்வரர் சிலையும் எடுத்து செல்லப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டன. கோயிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு  செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தேரோட்டம் முடிந்த நிலையில் நேற்று மாலை கோயில் வளாகத்திலேயே ஒய்யாளி உற்சவம் நடந்தது. தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த களைப்பில் அசதி கொண்ட முருகன், நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடி தனது களைப்பை போக்கிக்கொள்ளும் நிகழ்வாக ‘ஒய்யாளி உற்சவம்’ கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கோயிவில் வளாகத்திலேயே முருகன் ஆடிப்பாடி உலா வந்தார். இதை தொடர்ந்து, இன்று காலை 7 மணிக்கு மங்களகிரி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, நாளை இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. நாளைமறுநாள் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

அன்று காலை 9 மணிக்கு ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 13ம் தேதி இரவு 7 மணிக்கு  சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி தேதி முதல் 23ம் தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இந்த நாட்களில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினந்தோறும் மாலை 6 மணி முதல்  இரவு 7 மணி வரை பரதநாட்டியமும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக  சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வைகாசி விசாக  திருவிழாவுக்கான ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகம் செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.


Tags : Vadapalani Murugan Temple Therottam Kolagalam ,Vaikasi Visakha Festival: Tirukkalyanam , Vadapalani Murugan Temple Therottam on the occasion of Vaikasi Visakha Festival: Tirukkalyanam on the 12th
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...