வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்..!!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த சூறாவளி: மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கரையோரப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். ஜூன் 11 முதல் 13ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல், வடகேரளா, கர்நாடக கடலோரம், லட்சத்தீவில் பலத்த சூறாவளி ஏற்படக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:

சிவகங்கை, நீலகிரி  தலா 4 செ.மீ. , பொன்னமராவதி புதுக்கோட்டை 3, தேவாலா, எமராலட், செறுமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், காரியாபட்டியில் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், மேல் கூடலூர், விருதுநகர் , திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories: