×

குமரி மக்களின் நிறைவேறாத ரயில்வே திட்டங்கள்: ரயில்வே இணை அமைச்சரின் வருகையால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள, சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டம் ஆகும். 1950ம் ஆண்டு வரை தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்து, பின்னர் தாய் தமிழகத்துடன் இணைந்த மாவட்டம் ஆகும். கல்வியறிவு அதிகம் பெற்றவர்கள் நிறைந்த மாவட்டமாக இருந்தாலும் கூட, இங்கு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் இல்லை. இதனால் படித்தவர்கள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தான் அதிகம் பயணிக்கிறார்கள். இவ்வாறு தொழில் நிமித்தம், கல்வி நிமித்தம் உள்பட பல்வேறு பணிகளுக்காக தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கோ அல்லது மாநிலத்தின் வேறு பகுதிக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல போதுமான ரயில் சேவை இந்த மாவட்டத்தில் இல்லை. புதிய ரயில்கள் சேவை என்பது இந்த மாவட்ட மக்களுக்கு எட்டா கனியாக உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் குறிப்பிட்டு சொல்வதென்றால் கன்னியாகுமரி -  திருவனந்தபுரம், நாகர்கோவில் - மணியாச்சி, மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி ஆகிய ரயில் பாதைகள் இருவழிப்பாதையாக மாற்றம், திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி  ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு, காந்திதாம் - திருநெல்வேலி ஹம்சாபர்  வாராந்திர எக்ஸ்பிரஸ் (வழி நாகர்கோவில்), நாகர்கோவில் - தாம்பரம் வாரம்  மூன்று முறை ரயில், திருநெல்வேலி  தாம்பரம் அந்தியோதயா ரயில் நாகர்கோவில்  வரை நீட்டிப்பு என்ற ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே இந்த மாவட்ட மக்களுக்கு கிடைத்த பயனுள்ள ரயில் திட்டங்கள் ஆகும்.இந்தியாவின் கடைசி எல்லையான கன்னியாகுமரியிலிருந்து ஓர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில் தான் தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கு நேரடியாக பயன்படும் படியாக இருக்கும்.  குமரி மாவட்ட மக்களுக்கு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ அருகில் இருந்தாலும் 700 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் மாநில தலைநகரம் ஆகும். தலைநகர் சென்னையிலிருந்து குமரி மாவட்டம் அதிக தொலைவில் இருப்பதால் மற்ற மாவட்டங்களை போல் இல்லாமல் சென்னைக்கு செல்ல அதிக பயண நேரம் ஆகிறது.

இதனால் மாவட்ட பயணிகள் பல்வேறு அலுவல் பணிகள் நிமித்தம் சென்னைக்கு செல்ல ரயில் பயணத்தை நம்பி உள்ளனர். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும்படியாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு  திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ரயில்கள் இயக்க வேண்டும். கன்னியாகுமரியில் கடற்கரை ரயில்வே திட்டம்,  நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பாதை வசதி, நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் விரிவாக்கம், நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை, நாகர்கோவில் - திருநெல்வேலி இடைய கூடுலாக பயணிகள் ரயில் சேவை, கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைகளை வேகமாக முடிக்கும் வகையில் கூடுதலாக நிதி உதவி,  சென்னை - ஐதராபாத் இடையே தினசரி ரயில், கன்னியாகுமரி நிசாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அப்படியே உள்ளன.

இதே போல் குமரி மாவட்ட ரயில்வே பாதைகளை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இது பற்றிய  அறிவிப்பு அறிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம்  கோட்டத்தில் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரி மாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில்  புறக்கணிக்கப்படுகிறார்கள். கோட்டத்தை மாற்றம் செய்யும் போது அதிகளவில் ரயில் திட்டங்கள் கிடைக்கும்  என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ் சாகேப் பாட்டீல் தான்பே இன்று (9ம்தேதி) குமரி மாவட்டம் வருகிறார். சமீபத்தில் கன்னியாகுமரி ரயில் நிலைய புதுப்பிப்பு பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் வருகையால், குமரி மாவட்டத்தில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றாவது நிறைவேறுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சர்ச்சை தீருமா?
நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரசுக்கு அடுத்தபடியாக கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தற்போது இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரயிலை நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்க கோட்ட அதிகாரிகள் முடிவுகள் செய்து, அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள டவுன் ரயில்வே நிலையத்துக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. பயணிகள் ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டும். எனவே அனந்தபுரி எக்ஸ்பிரசை தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான பிரச்சினைக்கும் ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் தீர்வு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kumari ,Minister of Railways , Unfulfilled railway projects of Kumari people: Expectations increase with the arrival of the Joint Minister of Railways
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...