×

அரியலூரில் கையகப்படுத்திய நிலத்தை திருப்பி கொடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு: ஜெயங்கொண்டம் விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி அதிகளவில் இருப்பதால் அனல்மின் நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக மேலூர், கல்லாத்தூர், புதுக்குடி உள்ளிட்ட 13 கிராமங்களில் 1996ம் ஆண்டு 1,210 பேரிடமிருந்து 8,370 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் நிலத்தை வழங்கியவர்களுக்கு குறைந்த அளவிலான இழப்பீடு அளிக்கப்பட்டதால் தொகை அதிகரித்து தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில் அனல்மின் நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கே மீண்டும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திருப்பித்தர தேவையில்லை என்றும் அரசு கூறியுள்ளது. அனல்மின் நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. இதனிடையே ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கு எவ்வித கட்டணமின்றி திருப்பி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ள நிலையில், முதலமைச்சருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகால பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதன் மூலம் நிலத்திற்கான உரிய இழப்பீடு கிடைக்காமல் நிலமும் திரும்ப கிடைக்குமா என தவித்து வந்த விவசாய மக்களின் வயிற்றில் முதலமைச்சர் பாலை வார்த்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Government ,Ariyalur , Ariyalur, Tierra, Gobierno de Tamil Nadu, Jayankondam, Agricultor, Felicidad
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...