அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பிடிஒ அலுவலகம் முற்றுகை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேவளூர்குப்பம் ஊராட்சியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 6 பிளாக்குகளில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேற முறையான வடிகால்வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இதனால், பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், ஆத்திரம் அடைந்து குடியிருப்புவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் பெரும்புதூர்  பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பிடிஒவிடம் மனு அளிக்க சென்றனர். ஆனால், அலுவலகத்தில் பிடிஓ இல்லாததால் மேலாளர் பழனியிடம் மனு அளித்துள்ளனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் இல்லை என்றால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: