ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை திரும்ப வழங்க உத்தரவு: முதல்வருக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நன்றி

சென்னை: ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:1990ம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கான பணிகள் துவங்கியது. பின்னர் ஜெயங்கொண்டம் மற்றும் 13 கிராமங்களை சேர்ந்த 8,373 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மிகக்குறைவான இழப்பீட்டு தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், 3,500க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் வழக்கு தொடுத்தனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் பதியப்பட்டன.

2011ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சி அமைந்தது. நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து அதிமுக அரசு மேல்முறையீட்டுக்கு சென்றது. நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் அதிமுக அரசின் ஆர்வமின்மையால், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட செயலாக்கத்தில் இருந்து பின்வாங்கியது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்காக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. மக்களின் நன்மை குறித்து அக்கறையற்று இருந்தது. அதனால் மக்கள் இழப்பீடும் கிடைக்காமல், நிலத்திற்கும் உரிமையில்லாமல் தவிக்கும் நிலை நீடித்தது.2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரியலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டம் அருகே உரையாற்றும் போது, திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் செயல்படுத்தப்படும் அல்லது நிலம் உரிமையாளர்கள் வசம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

முதல்வர் தேர்தலுக்கு முன்பாக, அரியலூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயி, ‘‘ ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை  உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்”, என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த தலைவர் திமுக ஆட்சி அமைந்த உடன் ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடத்தில், சொன்னதை செய்து காட்டி இருக்கிறார் முதல்வர்.  எந்த கட்சியும் போராட்டம் நடத்தாமல், கோரிக்கை வைக்காமல் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். நிலத்தை திரும்பக் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்ப வழங்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார். வரலாற்றில் இல்லாத சாதனையாகும் இது. 25 ஆண்டு காலப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. நிலத்திற்கான உரிய இழப்பீடு கிடைக்காமல், நிலமும் திரும்ப கிடைக்குமா என தவித்து வந்த விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார். மறுவாழ்வு கிடைத்தது போல் உணர்கிறார்கள் நில உரிமையாளர்கள். பாதிக்கப்பட்ட 3,500 குடும்பத்தில் ஒருவன் என்ற முறையிலும், இந்த பகுதியின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவன் என்ற முறையிலும் ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் சார்பாக இரு கரம் கொண்டு வணங்கி நன்றி கூறுகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: