×

கடலூர் கண்ணகி-முருகேசன் ஆணவ கொலை வழக்கு 9 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சாதி மறுப்பு திருமணம் செய்ததால் காதில் விஷம் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட  ஆணவ கொலை வழக்கில் 9 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுளாக குறைத்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் முருகேசன் (25). பட்டியலின பிரிவை சேர்ந்த இவர் இளங்கலை பொறியாளர் படிப்பு படித்தவர். இவரும் அதே பகுதியில் உள்ள வேறு பிரிவை சேர்ந்த துரைசாமி என்பவர் மகள் கண்ணகி (22)யும் காதலித்து 2003 மே 5ம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, மாயமானார்.

இந்நிலையில் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள் முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷம் செலுத்தி அவர்களை கொலை செய்தனர். பின்னர், சடலங்களை தனித்தனியாக எரித்தனர். இது ஆணவ கொலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
 இதையடுத்து, கடந்த 2004ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை சிபிஐ  விசாரணைக்கு  உத்தரவிட்டது. இதனை விசாரித்த சிபிஐ அதே ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

பல ஆண்டுகள் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 2021 செப்டம்பரில் நீதிபதி உத்தமராஜா தீர்ப்பளித்தார். முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பில் தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, மனித குலத்தை அச்சுறுத்தும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் காட்டுமிராண்டி செயல். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழ் மண்ணின் வரலாறு கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பல நாட்கள் நடந்த வாதத்திற்கு  பிறகு தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கில் நேற்று மதியம் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், “கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அவர்களின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் உறுதி செய்யப்படுகிறது. துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Cuddalore ,Kannagi ,Murugesan massacre ,HC , Cuddalore: 9 convicted in Kannagi-Murugesan massacre case sentenced to life imprisonment
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...