போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபா ஆஜர்

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி  தாளாளர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த தொடர் பாலியல் புகாரின் அடிப்படையில் சென்னை சிபிசிஐடி போலீசார் அவர் மீது 8 வழக்குகள் பதிந்து கைது செய்தனர். சிறையில் இருந்தபடியே அனைத்து வழக்குகளுக்கும் நீதிமன்றத்தில் ஆஜரானார். செங்கல்பட்டு சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த அனைத்து வழக்குகளிலும் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் 1ல் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு எண் 1க்கான விசாரணை நேற்று செங்கல்பட்டு சிறப்பு சிறார் நீதிமன்றத்தில் வந்தது. இதையடுத்து, சிவசங்கர் பாபா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, அடுத்த மாதம் 15.7.2022ல் மீண்டும் சிவசங்கர் பாபா ஆஜராகும்படி உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் 13ம்தேதிக்கு பிறகு நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: