அடுக்குமாடி கட்டிடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சிஎம்டிஏ அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் அதிகாரம் மாற்றி அமைப்பு

* ஒற்றை சாளர முறையில் அனுமதி பெறும் நடைமுறை 2 மாதத்துக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும்

* வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் சிஎம்டிஏ  மற்றும் டிடிசிபி மூலம் ஒற்றை சாளர முறையில் அனுமதி என்கிற திட்டத்தை  செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம்  முழுமையாக்குவதற்கு முதலில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த திட்டத்துக்காக ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கடந்த 10ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வாங்குவது நடந்து வருகிறது.

கடந்த மே 10ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை 93 மனுக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இன்று 100க்கு மேல் தாண்டிருக்கிறது. சிஎம்டிஏவில் ஆன்லைன் மூலம் முழுக்க முழுக்க கட்டிட அனுமதிக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தது நில மாற்றம், லே அவுட்டிற்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறும் நடைமுறை இன்னும் 2 மாதத்துக்குள்ளாக முழுமை பெற்று விடும். அதன் பிறகு சிஎம்டிஏவில் ஆன்லைன்  மூலமாகத்தான் எல்லா அனுமதியும் கொடுக்கப்படும். மனுக்களும் அதன் மூலம் பெறப்படும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்த 1 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. மேலும் 2 மாதத்துக்குள் முழுமை பெற்று ஒற்றை சாளர அனுமதி பயன்பாட்டிற்கு வந்து விடும்.

டிடிசிபி பொறுத்தவரையில் ஒற்றை சாளர முறை அனுமதி இன்னும் 30 நாட்களில் நில மாற்றத்துக்கு, லே அவுட்டிற்கு வந்து விடும். இன்னும் 2 மாதத்தில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் பெறும் நடைமுறை வந்து விடும். டிடிசிபியில்  ஒற்றை சாளர அனுமதி முறை 2 மாதத்துக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கான அனுமதியை பொறுத்தவரையில் இதுவரை அமைச்சர் கையெழுத்திட்ட பிறகுதான் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த அனுமதியை இனி அமைச்சரிடம் பெற வேண்டியதில்லை. நேரடியாக சிஎம்டிஏ அலுவலகத்தில் அதற்கான பணியை செய்யலாம்  என்று அதிகாரத்தை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.  

அதனால், ஒன்றரை மாதம் அவர்களுக்கு மிச்சமாகும். சென்னை மாநகரில் சிஎம்டிஏ இருப்பது போன்று கோவை, சேலம்,  திருப்பூர், மதுரை, ஒசூர், திருச்சி போன்ற நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்கப்பட இருக்கிறது.  சிஎம்டிஏவில் இப்போது 46வது ஐஏஎஸ் அதிகாரி சிஇஓவாக உள்ளார். கோவையில் நில மாற்றத்துக்கு சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019ல் விண்ணப்பித்துள்ளார். ‘எம்ஆர்எம்ஜிஎப்’ என்கிற நிறுவனம் தான் விண்ணப்பித்துள்ளது. 13.3.2020ல் தான் திட்டக்குழுமத்தில் இருந்து வந்தது. 28.1.2021ம் ஆண்டில் தான் நில மாற்ற அனுமதி கிடைத்தது.

அன்றைய அதிமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டன. இந்த அனுமதி கிடைத்தது எல்லாம் சிவமாணிக்கம் என்பவருக்கு தான். கடந்த 12.1.2019ல் சிவமாணிக்கம் மனைபிரிவுக்கு விண்ணப்பித்துள்ளார். நில மாற்றம் செய்யாமல், மனை பிரிவுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதுவே தவறான நடைமுறை. இருப்பினும், கடந்த 31.3.2021ல்  டிடிசிபி அனுமதி தருகிறது. அதுவும் கடந்த ஆட்சியில் தான். அதன்பிறகு  4.2.2022ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெறுகின்றனர். அதன்பிறகு ரெராவு எம்ஆர்எம்ஜிஎப் என்கிற நிறுவனத்துக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜிஸ்கொயர் நிறுவனத்துக்கு இல்லை. எல்லா நிறுவனங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் மட்டும்  அனுமதி தரவில்லை. எல்லோருக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.

அண்ணாமலை கூறுவது போன்று யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை. அவர் சொன்னதில் 90 சதவீதம் பொய். ஜிஸ்கொயர் நிறுவனம் பெயரில் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின்படி அனுமதி வழங்கப்படுகிறது. எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு முழுக்க முழுக்க குறுகிய காலத்தில் அனுமதி வழங்கியதாக கூறுவது தவறு.  ஜிஸ்கொயர் தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை எனக்கூறுவது தவறான குற்றச்சாட்டு  2 மாதங்களுக்கு பிறகு விண்ணப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஸ்கொயர் நிறுவனத்துக்கு 2 அனுமதி மாநகராட்சி வழங்கியுள்ளது.

அதுவும் 84 நாட்களுக்கு பிற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் சார்பில் எந்த தவறும் இல்லை. சட்ட மீறலும் இல்லை. விண்ணப்பம் முறையாக இல்லாவிட்டால் காலதாமதம் ஏற்படுகிறது. அண்ணாமலை எனக்கு ஒரு வாய்ப்பை தந்துள்ளார். துறை சார்ந்து அனைத்து விவரங்களை வெளியிட முடிந்தது. அண்ணாமலை கேட்கும் தவறான கேள்விகளுக்கு பதில் சொல்ல எங்களுக்கு நேரம் இல்லை. சரியான ஆதாரங்களை சொன்னால் அதற்கு பதில் அளிக்கலாம். உள்நோக்கம் இல்லாமல் இருந்தால் அதனை கவனத்தில் எடுத்து கொள்வோம். இனியும் அடுத்த முறை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்தால் கண்டிப்பாக வழக்கு தொடரப்படும். ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் முதல்வரின் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை. கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் செப்டம்பரில் முடிக்கப்படும் என்றார்.

Related Stories: