×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் 2வது நாளாக ஆய்வு: ஒத்துழைக்க மறுத்து தீட்சிதர்கள் பிடிவாதம்; அதிகாரிகள் சென்னை திரும்பினர்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு 2வது நாளாக நேற்றும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தீட்சிதர்கள் ஒத்துழைக்க மறுத்து பிடிவாதம் செய்ததால் கோயிலை சுற்றிபார்த்துவிட்டு அதிகாரிகள் சென்னை திரும்பினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு சென்றது. இதையடுத்து 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவில் ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் லட்சுமணன், நடராஜன், உதவி ஆணையர் அரவிந்தன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேரும், ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதியும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த குழு நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில் கோயிலில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர், அதிகாரிகள் குழுவிடம் இது சட்டப்படியான குழு அல்ல. அதனால் இந்த குழுவுக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்தார். பின்னர் குழுவினர் வெளியே சென்று விட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் வந்தனர். அப்போதும் தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை. இரவு 7 மணி வரை கோயிலுக்கு வெளிப்புறம் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டபின் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்துவதற்காக கோயிலுக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு கோயிலுக்கு வந்த அதிகாரிகள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலை சுற்றி வந்து பார்வையிட்டனர். இதையடுத்து குழுவில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று விட்டார். கோயில் நடை சாத்தும் நேரம் வந்ததால் எஞ்சியிருந்த அதிகாரிகளும் 1 மணியளவில் கோவிலை விட்டு புறப்பட்டு சென்றனர். பின்னர் மாலை 4.45 மணிக்கு குழுவினர் மீண்டும் கோயிலுக்கு வந்தனர். அப்போது தீட்சிதர்களிடம் செயலாளர் இல்லையா? அலுவலகத்தின் சாவி இல்லையா? என கேட்டனர். அதற்கு தீட்சிதர்கள், எங்கள் செயலாளர் அலுவலகத்தின் சாவியை கொடுத்து விட்டு செல்லவில்லை எனக்கூறி ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.

பின்னர் வருவாய் அலுவலர் சுகுமார் கூறுகையில், 2 நாளாக கோயிலின் ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டோம். முதல் நாள் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் இருந்தார். அதன் பிறகு அவர் வரவில்லை. ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை. இரண்டு நாளாக திரும்பத்திரும்ப கேட்டும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. எங்களிடம் என்ன ஆவணங்கள் இருந்ததோ அதை வைத்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் நாங்கள் என்ன பார்த்தோமோ அதை மட்டும் அறிக்கையாக தயார் செய்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்புவோம். ஆணையரின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகே சட்டபூர்வ நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்” என்றார். அதன்பின் அவர்கள் சென்னை புறப்பட்டனர்.

Tags : Chidambaram Natarajar Temple ,Committee on Hindu Religious Affairs ,Dixit ,Chennai , 2nd day inspection of Chidambaram Natarajar Temple by the Committee on Hindu Religious Affairs: Dixit's stubbornness in refusing to cooperate; The officers returned to Chennai
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...