மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து 100 பேர் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பூக்கோட்டுபாடம் அரசுப் பள்ளி மைதானத்தில் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட 2 அணிகளிலும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் போட்டியை காண வழக்கத்தைவிட மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அமர்வதற்காக இரும்பால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. போட்டி தொடங்குவதற்கு முன்பு 2 அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர். அப்போது திடீரென ஒரு புறத்தில் இருந்த கேலரி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான ரசிகர்கள் வந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று போலீசார் கூறினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: