×

இந்தியாவில் 2020ல் என்ன உற்பத்தியோ, அதேதான் இப்போதும்: ப.சிதம்பரம் எம்பி பேச்சு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 நாள் கொள்கை பிரகடன பயிற்சி முகாம் நடைபெற்றது. நேற்று நிறைவு நாளில், இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் என்ன உற்பத்தி இருந்ததோ, அதேதான் 2022ம் ஆண்டிலும் உள்ளது என ஒன்றிய அரசை கண்டித்து ப.சிதம்பரம் எம்பி பேசினார். மாமல்லபுரம் அருகே கிருஷ்ணன் காரணையில் ஒரு தனியார் விடுதியில் உதய்பூர் பகுதி காங்கிரஸ் கட்சியினரின் 2 நாள் கொள்கை பிரகடன பயிற்சி முகாம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம் எம்பி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, தமிழகத்தில் இன்று (8ம் தேதி) முதல் வரும் ஜூலை 1ம் தேதிவரை காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும். இது, தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உணர்வை வெளிப்படுத்தவும், மக்களுடைய கருத்தை தெளிவு பெறவைக்கவும் நடத்தப்படுகிறது.

இதேபோல் ஆகஸ்ட் 9ம் தேதியில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் ப.சிதம்பரம் எம்பி பேசுகையில், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு முன், பின் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? அதாவது, கடந்த 2020ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி உற்பத்தி என்னவாக இருந்ததோ, அதேதான் 2 ஆண்டுகளுக்கு பின் 2022ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதிவரை இருந்திருக்கிறது.

இந்த 2 ஆண்டுகளில் மத்திய பாஜ ஆட்சி எந்த வளர்ச்சியையும் முன்னெடுக்காமல் விட்டதால், இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என ப.சிதம்பரம் எம்பி தெரிவித்தார். இதில் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், ஜோதிமணி, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், செல்வபெருந்தகை, விஜயதாரணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : India ,Chidambaram , India, Manufacturing, P. Chidambaram MP,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு