ஆட்டோ கட்டணத்தை உயர்த்த தமிழக அரசுக்கு குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் வாடகை ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25க்கு பதிலாக 40 ஆக உயர்த்த வேண்டும் என்றும், முதல் 1.8 கிமீ பயணத்திற்குப் பிறகு, ஒரு கி.மீ.க்கான கட்டணத்தை ரூ.12ல் இருந்து ரூ.18 ஆக அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்களைத் திருத்தியமைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அரசு ஆட்டோ வாடகை கட்டணத்தை நிர்ணயித்தது. அப்போது  குறைந்தபட்ச கட்டணமாக  ரூ.25 நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் கட்டணம் ரூ.12 என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும் காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ரூ.3.50, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரையிலான பயணங்களுக்கு 50% கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆட்டோ சங்கங்கள், ஆட்டோ  வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தன.

இதை  பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை வழங்க மாநில போக்குவரத்து துறை ஒரு குழுவை  அமைத்தது. கடந்த  ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மே  மாதம் ஆட்டோ ஓட்டுநர்களின் பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை கூட்டங்களை  நடத்திய பிறகு, குழு சமீபத்தில் திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை  அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதில், வாடகை ஆட்டோக்களில் குறைந்தபட்ச  கட்டணத்தை 25க்கு பதிலாக 40 ஆக உயர்த்த வேண்டும் என்றும், முதல் 1.8 கிமீ  பயணத்திற்குப் பிறகு, ஒரு கி.மீ.க்கான கட்டணத்தை ரூ.12ல் இருந்து ரூ.18 ஆக  அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறியதாவது:முதல் 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், இருப்பினும், அது 40 ஆக நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஆட்டோ ஓட்டுனர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’நீதிமன்ற உத்தரவுப்படி, ஆட்டோக்களுக்கு ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இருப்பினும், மொபைல் செயலியை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோர்ட் உத்தரவுப்படி, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

Related Stories: