×

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம்: அரசு விளக்கம்

சென்னை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி அங்கன்வாடி மையங்களிலேயே செயல்படும் என்றும், அங்கன்வாடி பணியாளர்களே தொடர்ந்து கையாளுவார்கள் என்றும் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2019-20ம் கல்வியாண்டில் அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜிவகுப்புகள் தொடங்கப்பட்டன. அந்த மையங்களில் உள்ள குழந்தைகளை இடைநிலை ஆசிரியர்கள் கையாள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையில், இது தற்காலிக திட்டம் என்றும், விளைவுகளை பொறுத்து இதனை நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடக்கக்கல்வி இயக்ககத்தில் 2013-14ம் கல்வியாண்டிற்கு பிறகு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் காலி பணியிடங்கள் நிறைய ஏற்பட்டு, கல்வி தரம் பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் இல்லாததால் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை வடமாவட்டங்களில் அதிகரித்து, அம்மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் கல்வியில் பின் தங்கின. கொரோனா கட்டுபாடுகள் விலக்கப்பட்ட பிறகு 5 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் மொத்தம் 9,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது. அதிக ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாண்ட ஆசிரியர்கள் மீண்டும் 1 -5ம் வகுப்பு ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முந்தைய முறையை பின்பற்றி, இந்தாண்டு முதல் அங்கன்வாடிகளை அதன் உதவியாளர்கள் கையாண்டு தற்காலிக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.           


Tags : LKG, UKG, Clase, Profesor, Cambio, Gobierno
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...