×

அரக்கோணம் அருகே ஆண் குழந்தை கொலை ‘சொத்து கிடைக்காது என்பதால் குழந்தையை கொன்றோம்’: தாய், மகள் பகீர் வாக்குமூலம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஆண் குழந்தை கொலை வழக்கில் தாய், மகள் கைது செய்யப்பட்டனர். சொத்து கிடைக்காது என்பதால் குழந்தையை கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (22). இவரது மனைவி அம்சாநந்தினி (21). இவர்களுக்கு கடந்த 44 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 5ம்தேதி அதிகாலை வீட்டின் கழிவறை பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குழந்தை மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது.

அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மனோ வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மனோவின் அத்தை தேன்மொழி (51), அவரது மகள் பாரதி (29) ஆகியோர் மனோவின் வீட்டிற்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இருவரும் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து ேபாலீசார் கூறியதாவது:
மனோவின் தந்தை ராமு இறந்து விட்டார். அவரது சொத்து மீது ராமுவின் தங்கையான தேன்மொழிக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது. மேலும் சொத்தை அபகரிக்க பல வகையில் முயற்சி செய்து வந்துள்ளார். அதன்படி தேன்மொழி, மனோ வீட்டில் ஏதோ தீய சக்திகள் உள்ளது என்றும், அம்சாநந்தினிக்கு பேய் பிடித்துள்ளது. அதை ஓட்ட வேண்டும் எனக்கூறி அடிக்கடி பூஜை செய்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி சாமியாடி மந்திரிப்பது, விபூதி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு நாடகங்களை நடத்தியும் மனோ குடும்பத்தினர், அந்த வீட்டை காலி செய்யாமல் அங்கேயே இருந்துள்ளனர்.

இந்நிலையில் மனோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்களது குடும்பத்திலேயே முதல் ஆண் வாரிசு. இந்த குழந்தை உயிரோடு இருந்தால் மனோவின் சொத்துக்களை கைப்பற்ற முடியாது என தேன்மொழி நினைத்துள்ளார். இதனால் கடந்த 4ம் தேதி நள்ளிரவு மனோ குடும்பத்தினர் தூங்கியபோது அவர்களது வீட்டிற்குள் நுழைந்த தேன்மொழி, குழந்தையை தூக்கி வந்து கழிவறை பக்கெட்டில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இதற்கு அவரது மகள் பாரதியும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் இருவரும் எதுவும் தெரியாததுபோல் அங்கிருந்து சென்று விட்டார்களாம்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழி, பாரதி ஆகியோரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

Tags : Arakkonam ,Pakir , Male child murder, mother, daughter confession
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...