குப்பையை அகற்ற உத்தரவு: ஆலந்தூர் மண்டல குழு தலைவர் ஆய்வு

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் மண்டலம் 164வது வார்டுக்கு  உட்பட்ட பழவந்தாங்கல் நேரு காலனி, நங்கநல்லூர்  4வது பிரதான சாலை பகுதிகளில் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வார்டு கவுன்சிலர் தேவி ஏசுதாஸ், மண்டல செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் ஹார்ட்டின் ரொசாரியோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அவர்கள், தெருக்களில் ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பையை பார்த்ததும் உடனடியாக அகற்றவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் இப்படி அசுத்தமாக வைக்கலாமா என்று அதிகாரிகளை  கடிந்துகொண்டனர்.

சென்னை நங்கநல்லூர் குளக்கரையில் தேங்கிய குப்பையை உடனடியாக அகற்றி குளத்தை சுத்தம் செய்யும்படியும் பூங்கா திடலில் உடைந்த விளையாட்டு கருவிகளை உடனடியாக மாற்றும்படியும் கேட்டுக்கொண்டனர். வார்டு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் தனியார் குப்பை அகற்றும் நிறுவனத்தினரிடம் பேசி தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவ்வப்போது வந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆய்வின்போது அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் மூர்த்தி, திமுக நிர்வாகிகள் மு.சத்யா, ஜெ.நடராஜன், ஏசுதாஸ், மோகன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: