செரப்பணஞ்சேரி ஏரிக்கு தடையின்றி மழைநீர் செல்ல: தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் செரப்பணஞ்சேரி பகுதியில் செரப்பணஞ்சேரி-நாட்டரசன்பட்டு சாலை உள்ளது. இந்த சாலை ஸ்ரீபெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை  கட்டுப்பாட்டில்  உள்ளது. நாட்டரசன்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செரப்பணஞ்சேரி-நாட்டரசன்பட்டு சாலையை பயன்படுத்தி படப்பை, ஒரகடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஒரு வழிப்பாதையாக சாலை இருப்பதால் அகலப்படுத்தி சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி சாலையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சாலையின் இடையே  புதியதாக 7 சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. செரப்பணஞ்சேரி பெரிய  தெரு, பாரதியார் சாலை வழியாக செல்லும்  மழைநீர், குட்டையில்  நிரம்பி  அதன்பிறகு செரப்பணஞ்சேரி  கன்னியம்மன் கோயில் குளத்தில் கலக்கும்.

இதனால் கன்னியம்மன் கோயில் அருகேயுள்ள சிமென்ட்  பைப்  கல்வெர்ட்  வழியாகவும், சாலையின்  மேலேயும் மழைநீர் வழிந்தோடி செரப்பணஞ்சேரி பெரிய  ஏரிக்கு  செல்கிறது. இதுமட்டுமின்றி சிமென்ட்   பைப் கல்வெர்ட் வழியாக 2  குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைனும் செல்கிறது. மழைகாலங்களில்  சரிவர ஏரிக்கு தண்ணீர் செல்லாததால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எனவே, கன்னியம்மன் கோயில் குளம் அருகே நெடுஞ்சாலையில் தரைப்பாலம் கட்டி செரப்பணஞ்சேரி ஏரிக்கு  மழைநீர்  தடையில்லாமல் செல்ல  வழிவகை செய்து  தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: