×

ஜமாபந்தி முதல் நாளில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் நேற்று துவங்கிய ஜமாபந்தியின் முதல் நாளன்று பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்கள்மீது உடனடி தீர்வு காணப்பட்டது. கும்மிடிப்பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 1431ம் பசலி வருவாய் தீர்ப்பாயம் எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலரான மாவட்ட உதவி ஆணையர் (மதுவிலக்கு) பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் எஸ்.ராமன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜமாபந்தியில் மாதர்பாக்கம் உள்வட்டத்தை சேர்ந்த பூதூர், தர்க்காஸ் கண்டிகை, வான்ராசிக்குப்பம், நேமள்ளூர், சிறுவாடா. மாதர்பாக்கம், மாநெல்லூர், செதில்பாக்கம், போந்தவாக்கம், பல்லவாடா, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஜமாபந்தி அலுவலர் பரமேஸ்வரியிடம் வழங்கினர்.
முதல் நாளான நேற்று பட்டா மாற்றம் தொடர்பாக 69 மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா தொடர்பாக 76 மனுக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 23 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பாக ஒரு மனு, சான்று கோரி ஒரு மனு, இதர மனுக்கள் 40 என மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்கள்மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் எஸ்.ராமன் தலைமையில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவா, வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தனி வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள் மாதர்பாக்கம் சம்பத், பூதூர் டேனியல், நேமள்ளுர் சூர்யபிரகாஷ், மாநெல்லூர் பிரீத்தி, செதில்பாக்கம் முத்து, போந்தவாக்கம் பாஸ்கர், கண்ணன்கோட்டை ஜான்பிரிட்டோ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Jamabandi , Jamabandhi, immediate solution to petitions
× RELATED பொன்னேரி ஜமாபந்தியில் 546 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு கோரிக்கை