×

காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கான சேவைகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!!

சென்னை: காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கான சேவைகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அரசுத்துறைகள் 50 இலட்சம் ரூபாய் வரை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என இந்த ஆண்டு  நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை நேரடி கொள்முதல் செய்வதை ஏதுவாக்கும் வகையில் அரசுத்துறைகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் புத்தொழில் நிறுவனங்கள்-அரசுத் துறைகள் இடையேயான கொள்முதல் நாள் (S2G Buy Day) என்ற தொடர் நிகழ்வினை ஒருங்கிணைக்கிறது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்.

மாதந்தோறும் நடைபெற இருக்கும் இந்நிகழ்வில், ஒவ்வொரு மாதமும் ஏதேனும்  இரண்டு அரசுத் துறைகள் சார்ந்து உயர்  அலுவலர்கள் பங்கேற்பர்.அத்துறை சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்று அவர்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி விளக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் அமையும். பின்பு துறை சார்ந்து தேவையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, தகுதியான புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும். எதிர்வரும் 14ம் தேதி , சமூக பாதுகாப்பு இயக்ககம் பங்கேற்கும் நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது. சமூக பாதுகாப்பு இயக்ககம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கான அரசு காப்பகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் உள்ள சிறுவர்,சிறுமியருக்காக இத்துறை செயல்படுகிறது.  பெற்றோர் இல்லாதவர்கள், தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் மட்டும் உடையவர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மீட்கப்பட்டவர்கள், குழந்தை திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என  சுமார் 44000 குழந்தைகள் இந்த காப்பகங்களில் உள்ளனர்.

இந்தக் குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து இந்நிகழ்வில் பங்கெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குறிப்பாக கல்வி, திறன் மேம்பாடு,மன நலம், வாழ்வியல் வழிகாட்டல் சார்ந்து இயங்கும்  புத்தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க  விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவமும், மேலதிக தகவல்களும் பெற www.startuptn.in இணையதளத்தை பார்வையிடவும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:12-06-2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu , Archive, Child, Skills Development, Innovation Institute, Government of Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...