கரூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த எடை குறைவான செயற்கை கோள்-நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்ப திட்டம்

கரூர் : உலகம் முழுதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்து, அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்த படைப்புகள் சவுண்டிங் ராக்கெட், ரிசர்ச் பலூன்கள் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் 120 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகேயுள்ள செம்மணக்கோன் பட்டி கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவன் டிராவிட் ரஞ்சன் கண்டுபிடித்த உயிரியல் செயற்கைகோளும் இடம் பெற்றுள்ளது.

இந்த செயற்கை கோள் வரும் செப்டம்பர் மாதம் நாசாவின், கொலம்பியா பெசிலிட்டியில் இருந்து ரிசர்ச் பலூனில் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது.218 அடி நீளமும், 146 அடி அகலமும் கொண்ட இந்த ரிசர்ச் பலூன் பூமியில் இருந்து ஒரு லட்சத்து 20ஆயிரம் அடி மேலே சென்று நிலை பெறுகிறது. இந்த மாணவர் கண்டுபிடித்த இந்த உயிரியில் செயற்கைகோள் கதிர்வீச்சுகளால் செடிகளில் ஏற்படும் மரபணு மாற்றம் பற்றியும், கெமிக்கலின் திறன் பற்றியும் ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வரும் டிராவிட் ரஞ்சன், கண்டுபிடித்த சிறிய மற்றும் எடை குறைவான இந்த உயிரியல் செயற்கை கோளுக்கு எஸ்எம்கேடி என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதனை தயாரிக்க செலவு குறைவு என்றாலும், ரேடியேஷன் விளைவு குறித்து 6 மாதம் பார்வையிட்டு, அதன் அறிக்கையை அனுப்பி வைத்ததால்தான் தற்போது விண்வெளிக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாணவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: