×

கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக பலரது வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் பள்ளி மாணவிகளும் தப்பவில்லை என்ற தகவல் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில் தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா கால கட்டத்தில் திருமணம் நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் 8-ம் வகுப்பு மாணவிகளையும் பெற்றோர்கள் விட்டுவைக்கவில்லை. அதாவது 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், 11-ம் வகுப்பு மாணவிகள் 417 பேர், 10-ம் வகுப்பு மாணவிகள் 45 பேர், 9-ம் வகுப்பு மாணவிகள் 37 பேர், 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் என்று, ஒட்டுமொத்தமாக 511 பேருக்கு இந்த கொரோனா கால கட்டங்களில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தகவல் கல்வித்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் விவரங்களை முழுமையாக திரட்டிய கல்வித்துறை, அவர்களில் பெரும்பாலான மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து, படிப்பை தொடர்வதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மாணவிகளின் விவரங்கள், ரகசியம் காக்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று, மாணவிகளின் படிப்பு பாதியில் நிறுத்தக்கூடாது; படிப்பை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன்படி, மாணவிகள் அனைவரும் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் இத்தனை மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றது தமிழக அரசிற்கும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசால் குறிப்பிட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வயதிற்கு முன்னதாகவே மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்று முழு அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் மாணவிகளின் படிப்பு பாதிக்காத வண்ணம் கல்வியை தொடர கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.                   


Tags : Corona, school student, marriage, study, information
× RELATED மெரினா கடற்கரையில் இரவில் நேர...