கிருஷ்ணகிரி அருகே சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்து சாலையில் சிதறிய மாங்காய்கள்-போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே சென்டர் மீடியனில் மோதி மாங்காய் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சிதறிய மாங்காய்களை மக்கள் அள்ளிச்சென்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று புறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அந்த பகுதியில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. மேலும், மாங்காய்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சரக்கு வாகனத்தை மீட்டனர். ஆனால், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அங்கு இல்லை. இதையடுத்து, சரக்கு வாகனத்தை போலீசார் கைப்பற்றினர்.

முன்னதாக சாலையில் சிதறிக்கிடந்த மாங்காய்களை அந்த பகுதி மக்கள் வந்து அள்ளிச்சென்றனர். ஏராளமான பொதுமக்கள் கூடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் கிருஷ்ணகிரி -சேலம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரக்கு வாகனத்தின் டிரைவர் யார், விபத்தில் காயமடைந்து அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாரா? அல்லது எங்கே சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: