×

ஜாக்கிகள் வைத்து பழைய பிளேட்டுகள் அகற்றப்பட்டது காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் தீவிரம்-ஒரு மாதத்தில் போக்குவரத்துக்கு தயார் என அதிகாரிகள் தகவல்

வேலூர் : காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகளை ஒரு மாதத்தில் முடித்து போக்குவரத்துக்கு திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட மங்களூர்- விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளது. இதை ₹2 கோடி செலவில் சீரமைக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்தது.

இதற்காக கடந்த ஏப்ரல் 1ம்தேதி போக்குவரத்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் பள்ளி மாணவர்களின் தேர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இப்பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால் உடனடியாக பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி போக்குவரத்து கடந்த 1ம் தேதி முதல் மாற்றப்பட்டு காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது.

இதற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இப்பணியை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ள நிலையில், நேற்று இம்மேம்பாலத்தின் சாலைப்பகுதியை தாங்கி நிற்கும் உலோக பிளேட்டுகளை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக மேம்பாலத்தின் தெற்கு முனையின் அடியில் ஜாக்கி வைத்து மேலேற்றி சேதமடைந்த பழைய பிளேட்டுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து புதிய உலோக பிளேட்டுகள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு மேம்பாலத்தின் ஒவ்வொரு இணைப்பிலும் 2 பிளேட்டுகள் என மொத்தம் 8 பிளேட்டுகள் அமைக்கப்பட்டதும், சாலை இணைப்புகள் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு புதிய தார்தளம் அமைக்கப்படும். தொடர்ந்து பிற பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை ஒரு மாதத்துக்குள் முடித்து போக்குவரத்துக்கு திறந்துவிட முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக பணிகளை விரைந்து முடிக்க தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடையை மீறும் வாகனங்கள்

காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக இருபுறமும் கடந்து செல்லும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூரில் இருந்து குடியாத்தம் கூட்ரோடு, கிறிஸ்டியான்பேட்டை செல்லும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், கார்கள் ஆகியன வள்ளிமலை கூட்ரோடு, காமராஜர் புரம், ரயில்வே நுழைவுப் பாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பஸ் நிலையம் வழியாகவும், கிறிஸ்டியான்பேட்டையில் இருந்தும், கரசமங்கலம், லத்தேரியிலிருந்தும் வேலூர் செல்லும் கார், இலகு ரக சரக்கு வாகனங்கள் ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாகவும் திருப்பிவிடப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தை பின்பற்றாமல் சில இருசக்கர வாகன ஓட்டிகள் பணி நடந்து கொண்டிருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் பிளாட்பாரத்தில் ஏறி செல்கின்றனர். அவர்களை தடுக்க முயலும் மேம்பால சீரமைப்பு பணியாளர்களை ஒருமையிலும், மிரட்டும் தொனியிலும் பேசி மேம்பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது.

பணி தொடங்கிய இரண்டு நாட்கள் போலீஸ் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது போலீசார் யாரும் இல்லாத நிலையில் சீரமைப்பு பணிக்கு இடையூறாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் செயல்படுகின்றனர். எனவே, ரயில்வே மேம்பால சீரமைப்புப்பணி முடியும் வரை இங்கு போலீசாரை நிறுத்தி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ரயில்வே மேம்பால சீரமைப்பு பணி முடியும் என்கின்றனர் ரயில்வே கட்டுமான பிரிவு பொறியாளர்கள்.

Tags : Katpadi , Vellore: It has been decided to complete the renovation work of Katpadi railway flyover within a month and open it to traffic
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி