×

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையத்தை, தினகரன் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில்,  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவை மட்டுமின்றி வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து தான், இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் நிறுவன பணிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், வாலாஜாபாத் பேருந்து நிலையம் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும்.

மேலும்,  காஞ்சிபுரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இங்கு வந்து செல்கின்றன. இதனால், பேருந்திற்காக கிராம மக்கள் நீண்ட நேரம்  நூற்றுக்கணக்கானோர் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் முறையான இருக்கைகள் இல்லாததால், மையப் பகுதியில் கிராம மக்கள் அமர வேண்டிய நிலை உள்ளது. இதனால், மக்கள் அமைந்திருக்கும் பகுதியில் பேருந்துகள் திரும்பும்பொழுது அவர்களின் கால்களில் மீது ஏறி விபத்துக்குள்ளாகும் சூழலும்  நிலவுகிறது என்று நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியாகியது. இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம்ஸ் ஜேசுதாஸ் நேற்று காலை வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.  இதில், பேருந்து நிலைய வளாகம், அதனை தொடர்ந்து அங்கிருந்த கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகளை நேரில் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா உட்பட பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Wallajabad Bus Station , Assistant Director of Municipalities raids Walajabad bus stand
× RELATED வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உழவர்...