வண்டலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக சிறுவனை எட்டி உதைத்த தந்தை: குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே குடும்ப தகராறில் குழந்தையை எட்டி உதைத்த தந்தையால், சிறுவனுக்கு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அடுத்த வசந்தம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (46). இவரது, மனைவி அம்பிகா (40). இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில், முத்துக்குமார் கொளப்பாக்கத்தில் இருந்து நெடுங்குன்றம் செல்லும் சாலை ஓரத்தில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதில், முத்துக்குமாருக்கும் அவரது அம்மாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி அம்பிகா இவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். இதனையடுத்து. சமாதானமான அம்பிகா கடந்த வாரம் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கணவர் முத்துக்குமார் தனது அம்மாவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், மனமுடைந்த அம்பிகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டார். இதனைக் கண்டதும் முத்துக்குமார் எனது அம்மாவிடம் தானே நான் சண்டை போடுகிறேன். நீ எதற்காக அடிக்கடி உங்க அம்மா வீட்டிற்கு செல்கிறாய் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை பிறகு  வாக்குவாதமாக முற்றியது. இதில் மிகுந்த கோபம் அடைந்த முத்துகுமார் 2வது குழந்தையான பிரவீன் (6) எட்டி உதைத்துள்ளார். இதில் சிறுவனுக்கு இடுப்பு மற்றும் 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வழிதாளாமல்  அலறி துடித்தான். இதை கேட்ட அருகில் இருந்த மக்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டு, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து முத்துகுமாரை தேடி விசாரணை நடத்தி வருகின்றார்.  இதனால், அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: