×

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கையில் நீர்நிலை, கால்வாய்களில் 3,148 எக்டேரில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவு: தமிழக அரசிடம் நீர்வளத்துறை அறிக்கை

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்களில் 3148 எக்டேர் பரப்பளவில் உள்ள கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசிடம் நிதி கேட்டு நீர்வளத்துறை அறிக்கை அளித்துள்ளது.தமிழகத்தில் ஏரி, குளங்கள், ஆறுகள், அணைகள், விவசாய நிலங்கள், புறம்போக்கு என பல லட்சம் ஏக்கர் பரப்பை சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்த மரங்கால் நிலத்தடி நீர் குறைந்து. விவசாய நிலங்களும் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. எனவே, இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கடந்த 2017ல் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நீர்வளத்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்களில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த திட்டத்துக்கென ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற கடந்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அனைத்து ஏரி, குளங்களிலும் கருவேல மரங்களை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் தொடர்பான விவரங்களை கணக்கெடுக்க நீர்வளத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சீமை கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தரவும் அறிவுரை வழங்கியது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் 2 லட்சம் எக்டேர் சீமை கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 28 ஏரிகள், 3 ஆறுகள், 6 கால்வாய்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள், 1 நீர்நிலை, 5 ஆறுகள், 162 கால்வாய் மற்றும் வடிகால்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகள், 6 ஆறுகள், 61 கால்வாய் மற்றும் வடிகால்களும், செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் 564 ஏரிகளும், 4 ஆறுகள், 325 கால்வாய்கள் மற்றும் வடிகால்கள்  உள்ளன. இதில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்களில் 148.306 எக்டேர் பரப்பளவிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3040 எக்டேர் பரப்பளவிலும் கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள 3148 எக்டேர் பரப்பளவிலான கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக  நீர்வளத்துறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பேரில், ஒன்றிய அரசு அல்லது மாநில அரசின் சிறப்பு நிதி பெறப்பட்டு அதன் மூலமோ அல்லது வழக்கம் போல் ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும் நிதியின் மூலமோ அகற்றப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Tiruvallur ,Kanchi ,Water Resources Department ,Government of Tamil Nadu , Decision to remove 3,148 hectares of oak trees in Chennai, Tiruvallur, Kanchi, Chennai water bodies and canals: Water Resources Department Report to Government of Tamil Nadu
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு